தமிழ்நாடு

'அகற்றிடு அகற்றிடு' - டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

'அகற்றிடு அகற்றிடு' - டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

webteam

புதிய மதுக்கடைக்கு எதிராக 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கல்பட்டு அருகே மேலமையூர் பகுதியில் நேற்று புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது இந்நிலையில், மதுக்கடை திறக்கப்பட்டால் இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பள்ளி, கோவில்கள் அருகே மதுக் கடைகளை திறக்கக் கூடாது என கூறி மேலமையூர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு - மாமல்லபுரம் திருக்கழுகுன்றம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

செங்கல்பட்டு மதுராந்தகம் சாலையில் மூன்று மதுபான கடைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் பொதுமக்கள தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், மூன்று மதுபான கடைகளையும் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு - திருக்கழுகுன்றம் சாலையில் மேலும் இரண்டு கடைகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து மூன்று அரசு மதுபான கடை ஒரே சாலையில் திறக்கப்பட இருப்பதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளாகியுள்ளனர்.