அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அந்த கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்தும் பதவிகளிலிருந்து நீக்கியதுடன், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, சசிகலா வழக்கை மீண்டும் பட்டியலிட்டு விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) வழக்கை பட்டியலிடுவதாக தெரிவித்துள்ளார்.