எண்னூரில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண உதவித் தொகையாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், எண்ணெய் கசிவால் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் நிறுவனங்களிடமிருந்து உரிய நிவாரணத்தை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி எண்ணெய் கசிவினால் பாதிப்புக்குள்ளான திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான மொத்த செலவான 15 கோடி ரூபாய் முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 75 லட்ச ரூபாய் செலவில் எர்ணாவூர், நொச்சிக்குப்பம் ஆகிய இடங்களில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.