ரிலையன்ஸ் ஆலை - சென்னை முகநூல்
தமிழ்நாடு

சென்னைக்கு ரிலையன்ஸ் ஆலை? சந்தையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழலாம்?

நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையில் கால்பதித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களை சென்னையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

செய்தியாளர்: கௌசல்யா

நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையில் கால்பதித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், வீட்டு உபயோகப் பொருட்களை சென்னையில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் சர்வதேச பிராண்டுகளின் ஆதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையில் கால்பதித்துள்ளது.

ரிலையன்ஸ் ஒரு துறையில் கால் பதிக்கிறது என்றால் அதே துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சற்று அச்சம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு காரணம், அதிரடி சலுகைகள் உள்ளிட்ட விதவிதமான வணிக யுக்திகளை அள்ளிவீசி சந்தையை தன்வசப்படுவது ரிலையன்சின் பாணியாக உள்ளதுதான்.

அந்தவகையில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் துறையிலும் களமிறங்கியுள்ளது. மலிவு விலையில் ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., எல்.இ.டி. பல்ப் என வீட்டு பயன்பாட்டு பொருட்களை தயாரித்து வைசர் (WYZR) என்ற பெயரில் ரிலையன்ஸ் விற்பனை செய்யவுள்ளது.

இதற்காக, ஒனிடா நிறுவனத்தின் தாய் நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் மிர்க் எலக்ட்ரானிக்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், நுகர்பொருள் சந்தையை பிடித்தவுடன் நீண்ட கால அடிப்படையில் WYZR என்ற பெயரில் தனியாக உற்பத்தியை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. RELIANCE RETAIL நிறுவனத்தின் மூலம் WYZR என்ற பெயரில் ஏற்கனவே ஏர் கூலர் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சான்மினா என்ற நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை 2022ஆம் ஆண்டே ரிலையன்ஸ் கையகப்படுத்தியிருந்தது. இந்தச்சூழலில், வீட்டு உபயோகப் பொருட்களை இந்த ஆலையில் வைத்தே ரிலையன்ஸ் உற்பத்தி செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உண்மையாகும் பட்சத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதோடு இந்தியா முழுக்க மேடு இன் இந்தியா தயாரிப்புகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.