தமிழ்நாடு

சென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களைத் திறக்க முடியும் - தமிழக அரசு

சென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களைத் திறக்க முடியும் - தமிழக அரசு

PT

சென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களை திறப்பது தொடர்பான உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என தமிழக அரசு கூறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 22-ஆம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்யாவசிய தேவைகள் தவிர பிற அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டன. இதில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பட்டனர். குறிப்பாக முடித் திருத்தம் தொழில் செய்யும் நபர்கள் தொழில் செய்ய முடியாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பொதுமுடக்கத்தால் முடித்திருத்தம் தொழில் செய்யும் நபர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கொரோனா விதிமுறைகளின் படி கடைகளைத் திறக்க அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான முடிவை தெரிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கை 28ஆம் தேதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பதிலளித்த தமிழக அரசு சென்னையில் கள நிலவரத்தை பொறுத்தே சலூன்களை திறக்க உரிய உத்தரவுகள் பிறப்பிக்க முடியும் எனக் கூறியது. இதனையடுத்து இந்த வழக்கு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.