தமிழ்நாடு

தவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு -திருவள்ளூர் எஸ்.பி அறிவிப்பு

தவறாக நடக்க முயன்ற நபரை தற்காப்பிற்காக கொன்ற பெண் விடுவிப்பு -திருவள்ளூர் எஸ்.பி அறிவிப்பு

webteam

இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொன்ற பெண் விடுவிக்கப்படுவதாக திருவள்ளூர் ஐபிஎஸ் அரவிந்தன் தெரிவித்து இருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதமி(19).இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஊரை விட்டு சற்று தொலைவிற்கு சென்ற நிலையில், அவரை பின் தொடர்ந்து வந்த அவரது உறவினர் அஜித்குமார்(25) கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தன்னை காத்துக் கொள்வதற்காக அஜித்குமாரிடம் கத்தியை பிடுங்கிய கௌதமி, அவரை சரமாரியாக வெட்டியதில், அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்ற கெளதமி நடந்தவற்றை கூறி சரண் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரண் அடைந்த கெளதமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் தற்காப்பிற்காக அஜித் குமாரை கத்தியால் குத்தியதும், அவருக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில், இளம் பெண் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302 கீழ் பதிய செய்யப்பட்ட கொலை வழக்கு, ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றப்பட்டு அந்தப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்டம் எஸ்.பி அரவிந்தன் கூறும் போது, “ கொலை செய்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் தற்காப்பிற்காக மட்டுமே அஜித் குமாரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. அதனால் அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் 302 கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு, ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றப்பட்டு விடுவிக்கப்படுகிறார். இது தொடர்பான இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்பதை காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

எஸ்.பி அரவிந்தன் ஃபேஸ்புக் பதிவு..https://m.facebook.com/story.php?story_fbid=3927792743918345&id=100000629744349