கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராததால், தமுமுக-வினர் நல்லடக்கம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியராக பணி புரிந்து வந்தவர் ராஜா முகம்மது (53). இவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒருவார சிகிச்சைக்கு பின் பேராசிரியரை டிஸ்சார்ஜ் செய்த தனியார் மருத்துவமனை, மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியது.
இதனடிப்படையில் அவரது உறவினர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கும் ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்தவர் பலனளிக்காமல் திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில், இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காரைக்குடி இஸ்லாமிய அமைப்பான தமுமுக-வினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள இஸ்லாமியர்களின அடக்கத்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வராவிட்டாலோ அல்லது தயக்கம் காட்டினாலோ காரைக்குடி தமுமுகவினர் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று அடக்கம் செய்து வருவது இப்பகுதி மக்களின் நெஞ்சை நெகிழ வைப்பதாக உள்ளது.