தகாத உறவைக் கண்டித்த கணவனுக்குத் தூக்க மாத்திரைக் கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் இராமன். கட்டிடத்தொழிலாளியான இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு சத்யா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். சத்யா அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகே வசித்து வரும் வாகன ஓட்டுநர் இராம மூர்த்தி என்பவருக்கும் சத்யாவுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை இராமன் கண்டித்து இராம மூர்த்தியுடனான உறவைக் கைவிடத் தனது மனைவிக்குத் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார். இருந்த போதிலும் அவர்களது உறவு தொடர்ந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இராமன் இறந்துவிட்டதாகக் கூறி சத்யா உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் இறந்த இராமனின் உடலை முறைப்படி அடக்கம் செய்தனர். இருந்தபோதிலும் இராமனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் இலட்சுமணன் நாமக்கல் காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சத்யா தனது கணவருக்கு இரவு உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததும், அதன் பின்னர் தனது கள்ளக்காதலன் இராம மூர்த்தியை வீட்டிற்கு வரவழைத்து இராமனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உறவினர்கள் முன்னிலையில் நாடகமாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட இராம மூர்த்தி மற்றும் சத்யா இருவரையும் கைது செய்த நாமக்கல் காவல்துறை சிறையில் அடைத்தனர்.