ஆம்ஸ்ட்ராங் படுகொலை முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் கொலை| பென்டிரைவ் மூலமாக வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை.. வாங்க மறுத்த குற்றவாளிகள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகலை பென்டிரைவில் வழங்கியதால், வாங்க மறுத்த குற்றவாளிகள்.. நவம்பர் 4ஆம் தேதி வழக்கு ஒத்திவைத்த எழும்பூர் நீதிமன்றம்

ஜெ.அன்பரசன்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 நபர்களை போலீசார் கைது செய்தனர். அதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மூன்றாம் தேதி 30 நபர்கள் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த குற்றப்பத்திரிக்கையின் நகலை வழங்குவதற்காக இன்று சிறையில் இருந்து 26 நபர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நாகேந்திரன் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் அவரை அழைத்து வரவில்லை. பின்னர், அழைத்து வரப்பட்ட 26 நபர்களையும் பொறுப்பு மாஜிஸ்ட்ரேட் தர்ம பிரபுவிடம் ஆஜர் படுத்தினர். அப்போது குற்றப்பத்திரிக்கையின் நகலை பென்டிரைவ் மூலமாக குற்றவாளிகளிடம் கொடுத்த போது அவர்கள் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெயிலுக்குள் பென்டிரைவ் அனுமதிக்கப்படவில்லை எனவும் இதனால் குற்றப்பத்திரிக்கையில் உள்ள தகவல்களை அவர்களால் படிக்க முடியாது எனவும் பேப்பரில் குற்றப்பத்திரிகை நகல் கொடுத்தால் படிக்க ஏதுவாக இருக்கும் எனவும் குற்றவாளியின் வழக்கறிஞர்கள் மேஜிஸ்ரேட்டிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆம்ஸ்ட்ராங்

அதற்கு BNS சட்டத்தில் பென்டிரைவ் மூலமாக குற்றப்பத்திரிகை நகங்களை வழங்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு வாதங்களையும் கேட்ட மேஜிஸ்ட்ரேட் வருகிற 4-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

மேலும் ஏ3 குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அஸ்வத்தாமன் தனக்கும் தனது வழக்கறிஞருக்கும் தொடர்ச்சியாக மிரட்டல் வருவதால் போலீசார் தனி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மேஜிஸ்ட்ரேட்டிடம் கோரிக்கை வைத்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று பெண்களை புழல் சிறையிலும் மற்றும் மற்ற நபர்களை பூந்தமல்லி சிறையிலும் அடைத்தனர்.