பாரதிய ஜனதா நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்காரணங்களை முன்வைத்து வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரணை செய்தது.
இந்த விசாரணையின்போது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயண், கொரோனா தொற்றுக்கான 2 வது மற்றும் 3 வது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என வாதிட்டார்.
இதனைத்தொடர்ந்து பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது “ சமூக விலகலை கடைபிடித்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்தப் பின்னரும், மாநில அரசு இதற்கு அனுமதி தர மறுப்பது அவசியமில்லாதது. மேலும் பள்ளிக் கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவெடுத்துள்ள பட்சத்தில் வேல் யாத்திரைக்கு தடைவிதிப்பது சரியானது அல்ல எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்குகளை முடித்து வைத்த நீதிமன்றம், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீது தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வழக்குகளை தொடரலாம் என தெரிவித்துள்ளது.