பாதிக்கப்பட்டவர்கள் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை| "ரொம்ப டார்ச்சர் பண்றாங்க..” காதல் திருமணம் செய்த பெண்ணை ஊருக்குள் அனுமதிக்க மறுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஓச்சப்பட்டியில் காதல் திருமணம் செய்த பெண்ணை ஊருக்குள் அனுமதிக்க விதித்த அபராத தொகையை கட்டாததால் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்துள்ளதாக பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள ஓச்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் - வெள்ளையம்மாள் தம்பதியினர். வெள்ளையம்மாள் ஊராட்சியில் தூய்மை காவலராக பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், ஜோதி மீனா என்ற மகளும் உள்ளனர். முருகேசனும், வெள்ளையம்மாளும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதி மீனா வயலோகம் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள்

இதனைத் தொடர்ந்து ஜோதி மீனா கர்ப்பமாய் இருந்த நிலையில், தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஓச்சப்பட்டியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான வேளாண்மை வருவாய்த் துறையில் பணிபுரிந்து வரும் ஆறுமுகம் என்பவர் தலைமையில் பாலு, சரவணன், மோகன், முருகன், ஆறுமுகம் ஆகியோர் ஜோதி மீனாவை ஊருக்குள் அனுமதிக்க மறுத்ததோடு அபராதமாக ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து வெள்ளையம்மாள், ரூ.3,500 பணத்தை செலுத்தி விட்டு, ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் பிறகும் வெள்ளையம்மாள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகக் கூறி கிராமத்தில் நடைபெற்ற ஊர் திருவிழாவில் வரி ஏதும் வசூலிக்காமல், பெண்கள் நடத்தி வரும் சுய உதவிக் குழுவில் இருந்தும் நீக்கியதோடு அதில் உள்ள சேமிப்பு தொகையான ரூ.40 ஆயிரத்தை தர முடியாது என்றும் கூறியதாக தெரியவருகிறது. இதனால் மனமுடைந்த வெள்ளையம்மாள் அன்னவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அன்னவாசல் காவல் துறையினர் விசாரித்து வந்துள்ளனர்.

SP Office

அதன் பிறகும் ஆறுமுகம் என்பவர், மற்றவர்களை தூண்டிவிட்டதை அடுத்து, குடித்துவிட்டு வந்து வெள்ளையம்மாள் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வெள்ளையம்மாள், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தானும், தனது மகனும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று வெள்ளையம்மாள் கூறினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.