தமிழ்நாடு

நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!

நெல்லை: அணைகளில் உபரிநீர் திறப்பு குறைப்பு; தாமிரபரணியில் வெள்ளம் சற்று குறைந்தது!

JustinDurai

நெல்லை மாவட்டத்தில் 1992-க்கு பிறகு தற்போதுதான் இந்த அளவு மழை பெய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை நீடித்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதன் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் வௌ்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றங்கரைகளில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். இதுவரை 26 முகாம்களில் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு நான்கு நாட்கள் (ஞாயிற்றுக்கிழமை வரை) தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு 27,863 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நேற்றும் இன்றும் மழைப்பொழிவு சற்று குறைந்து, அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 7,050 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 6,400 கன அடி தண்ணீரும், கடனாநதி அணையில் இருந்து 2,500 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 360 கன அடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 16 ஆயிரத்து 310 கன அடி வீதம் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளமும் சற்று குறைந்தது. இதனால் நெல்லையிலும் ஆற்றில் வெள்ளம் குறைந்ததால் தண்ணீரில் மூழ்கி இருந்த தைப்பூச மண்டபம் வெளியில் தெரிந்தது. எனினும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தொடர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விளைநிலங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபாட்டுள்ளனர்.

இதுகுறித்து நெல்லை ஆட்சியர் விஷ்ணு கூறுகையில், ‘’ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தாமிரபரணி ஆற்றுக்கு வரும் தண்ணீர் கணக்கிடப்பட்டு வருகிறது. அதற்கேற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி குழு அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மழையினால் உயிரிழப்பு ஏதும் இல்லை. அந்த அளவுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்’’ என்று கூறினார்.