தமிழ்நாடு

நூதன முறையில் செம்மரங்கள் கடத்தல் : திரைப்பட பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்

நூதன முறையில் செம்மரங்கள் கடத்தல் : திரைப்பட பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்

webteam

திருவள்ளூரில் தர்பூசணி பழங்களுக்குள் மறைத்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த மினி லாரியை போலீஸார் விரட்டிச் சென்று பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழக - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் சென்ற மினி லாரியை, துரத்தி சென்ற காவல் துறையினர் சில கிலோ மீட்டர் தூரம் சென்றபின் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த மினி லாரியை சோதனை செய்த போது, அதில் தர்பூசணி பழங்கள் இருந்துள்ளன.

தர்பூசணி பழத்திற்காக ஏன் நிற்காமல் செல்ல வேண்டும் என்று சந்தேகமடைந்த காவல்துறையினர், அவற்றை அப்புறப்படுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் தர்பூசணி பழங்களுக்கு அடியில், செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், வாகனத்தை ஓட்டி வந்த சதீஷ் மற்றும் டேவிட் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் எனவும், அவை ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவை சென்னை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட இருந்ததாகவும், செம்மரக்கட்டைகளை கடத்திய இருவரையும் தவிர்த்து இதில் யார் ? யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகவும் ஆரம்பாக்கம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.