தமிழ்நாடு

 “தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்

 “தொழிற்படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்யுங்கள்” - உயர்நீதிமன்றம்

webteam

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வயதுவரம்பு 17 என்பதை குறைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தை சேர்ந்த எஸ்.மாலதி என்ற மாணவி 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்ணிற்கு 353 மதிப்பெண்கள் பெற்று, செவிலிய படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். செவிலியர் படிப்பில் சேர தகுதியான மதிப்பெண் பெற்றிருந்த நிலையிலும், 2019 டிசம்பர் 31ஆம் தேதியன்று 17 வயது பூர்த்தியாக வேண்டும் என்ற விதியை பூர்த்தி செய்ய முடியாமல், இரண்டு மாதங்கள் குறைவாக இருப்பதாக கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தபோது, வயதுவரம்பை நிர்ணயிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்திற்கு அதிகாரம் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

ஆனால் இந்திய நர்சிங் கவுன்சில் விதிகளின்படியே வயது நிர்ணயிக்கப்பட்டதாக பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் குறைந்தபட்ச வயதுவரம்பை தளர்த்த மறுத்துள்ள உத்தவுகளை சுட்டிக்காட்டி மாலதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

அதேசமயம், பள்ளி படிப்பில் சிறந்து விளங்குகிற மாணவர்கள், குறைந்தபட்ச வயது நிரம்பவில்லை என்ற காரணத்தினால் தொடர்ச்சியாக கல்வி கற்பது பாதிக்கப்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கல்வி துறையில் பல முன்னேற்றங்கள் நிலழ்ந்துள்ள நிலையிலும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயதை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்கபட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். எனவே மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான குறைந்தபட்ச வயதை மாற்றியமைப்பது குறித்து மத்திய மாநில அரசுகளும், அந்தந்த கல்வி கவுன்சிகளும் விரைந்து பரிசீலிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி படிப்பை சிறந்த முறையில் முடிக்கும் மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதிற்கு சில நாட்களோ, சில மாதங்களோ இடையூறாக இல்லாமல், அதை தளர்த்துவதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும் உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.