தமிழ்நாடு

வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை

வில்சன் கொலை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற பரிந்துரை

webteam

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ.‌ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற மத்திய உள்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8-ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிய காவல்துறையினர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொதுவாக உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அதுகுறித்த தகவலை 15 நாள்களுக்குள் மத்திய உள்துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி வில்சன் கொலை வழக்கு குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கை என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

வில்சன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு என்.ஐ.ஏ.வுக்கு அனுப்பியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாம் என கருதப்படுவதால் வில்சன் கொலை வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தவ்பீக் மற்றும் அப்துல் சமீமை ‌10 நாள்கள் காவலில் எடுத்துள்ள தமிழக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்‌றனர்.