மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. தமிழகத்தை பொறுத்தவரை காலை முதலே பாஜக வேட்பாளர்களில் ஒருவர் கூட முன்னிலையில் இல்லை. இருந்தபோதிலும், ஆனால், அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மட்டும் 13 சுற்றுகள் வரை முன்னிலை வகித்து வந்ததார்.
இதனால், பாஜக கூட்டணியில் உள்ள சௌமியா வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஏற்பட்டது ஒரு திருப்பம்... அதற்கு அடுத்துவந்த சுற்றுகளில் திமுக வேட்பாளர் மணியைவிட சௌமியா பெற்ற வாக்குகள் குறையத் தொடங்கியது. கடைசியில் சௌமியா 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்தார்.
6 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் சௌமியா தோல்வியைத் தழுவ காரணமாக இருந்தது அரூர் தனி தொகுதி.
இந்தத் தொகுதியில் சௌமியா 46,175 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் மணி இவரைவிட இருமடங்கு அதிகமாக, அதாவது 85,850 வாக்குகள் பெற்றிருந்தார். இது சௌமியாவின் வெற்றிமுகத்தை முழுவதுமாக மாற்றியது என்றே கூறலாம்.
அதேநேரம், பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி மற்றும் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதிகள் சௌமியாவிற்கு கைகொடுத்தன.
தருமபுரி மக்களவைத் தொகுதியை திமுக தட்டிச்சென்ற நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் மணி 4,32,667 வாக்குகளை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக சௌமியா 2ஆவது இடத்தை பெற்றிருக்கிறார். அவர் பெற்ற வாக்குகள் 4,11,367.
3ஆவது இடத்தில் உள்ள அதிமுக 2,93,629 வாக்குகளை பெற்றிருந்தது.
இந்தத் தேர்தல் மட்டுமல்ல, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் தருமபுரியில் போட்டியிட்ட பாமக, அதே அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில்தான் குறைவான வாக்குகளை பெற்றிருந்தது. அப்போது திமுகவின் வேட்பாளர் செந்தில்குமாரைவிட அன்புமணி ராமதாஸ் சுமார் 70 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.
சாதிய வாக்குகளை பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் பாமக தருமபுரி மக்களவைத் தொகுதியை தேர்ந்தெடுப்பதாக கூறப்படும் நிலையில், அதே சாதிவாரிய வாக்குகளால்தான் தோல்வியை தழுவுவதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.