தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர்களை தொடரும் ரெய்டு - அதிரடி சோதனையா? அரசியல் காழ்ப்புணர்ச்சியா?

முன்னாள் அமைச்சர்களை தொடரும் ரெய்டு - அதிரடி சோதனையா? அரசியல் காழ்ப்புணர்ச்சியா?

கலிலுல்லா

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் சோதனைகள் தொடர்பாக குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.சி. வீரமணி என இந்த பட்டியல் நீள்கிறது. அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 11கோடியே 32 லட்சம் மதிப்பில் சொத்துக்கள் சேர்த்ததாக சோதனை நடத்தப்பட்டது.

இதுவரை நடத்தப்பட்ட எந்தச் சோதனையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சுறுத்தும் செயலே என்கிறார் வழக்கறிஞர் அக்னீஸ்வரன். அனைத்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

அமைச்சர்கள் மட்டுமே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்க முடியாது என்றும், அதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை கண்டறிந்து காலம் தாழ்த்தாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.