மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை தாக்கிய காவலர் pt desk
தமிழ்நாடு

கோவை: மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை தாக்கிய காவலர்... ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்!

மேட்டுப்பாளையம் அருகே மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை கடுமையாக அடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார்... சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தொடர்புடைய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

PT WEB

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள ஆலாங்கொம்பு தண்ணீர்தடம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவரது மகன் கார்த்திக், தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் வீட்டிற்கும் சரியாக வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், கார்த்திக் தனக்கு தெரிந்தவர்கள் பலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் தெரிகிறது.

மகன் வாங்கிய கடனுக்காக தந்தையை தாக்கிய காவலர்

இந்நிலையில், கார்த்திக் வாங்கிய கடனை திருப்பித் தராததால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வேல்முருகன் வீட்டிற்கு சென்று கடனை கேட்டுள்ளனர். அப்போது வேல்முருகன், “என் மகன் கார்த்திக் வீட்டுக்கு வருவதில்லை. கடன் வாங்கியது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமுகை காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் மற்றும் காவலர்கள் விசாரணைக்காக கார்த்திக் வீட்டுக்குச் சென்றனர். அப்போது கார்த்திக் வீட்டில் இல்லாததால் அவர் தந்தை வேல்முருகனை விசாரணைக்காக சிறுமுகை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். அதற்கு அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் வேல்முருகனை அடித்தும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

Covai SP

இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ரஞ்சித்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.