ஆர்.பி.உதயக்குமார் pt desk
தமிழ்நாடு

“அம்மா உயிர் பறிபோக நீங்கள்தான் காரணம்” - ஓபிஎஸ் மீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

“அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம்... நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவதில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசி உள்ளார்.

webteam

செய்தியாளர்: பிரேம்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்...

“தாய்மார்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது., நீங்கள் அதே அறிவிப்பை வெளியிட்ட போது எந்த இடத்திலும் பேசப்படவில்லை. ஏனென்றால் பொய்யான வாக்குறுதியை அளிப்பவர்கள் நீங்கள்... அதனால் மக்கள் அதனை நம்பவில்லை. ஆனால், அதிமுக அதே அறிவிப்பை கொடுக்கும் போது பேசப்படுகிறது.

மூன்று முறை முதல்வராக இருந்த ஒபிஎஸ், இன்று கட்சியின் கறைவேட்டியைகூட கட்ட முடியவில்லை. கட்சிப் பெயரையும் பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது, அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதல்வராக இருந்த அவர், அம்மாவை வெளிநாட்டிக்கு கூட கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால், மௌன சாமியாராக இருந்துவிட்டார். அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர், அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலை இல்லை. இன்று வீதியில் நின்று ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார், சின்னத்திற்காக அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறார். அம்மா உயிர் பறிபோக நீங்கள்தான் காரணம். அம்மாவின் ஆன்மா, இந்த தேர்தல் முடிந்த பின் அரசியலை விட்டே போகும் நிலைக்கு உங்களை தள்ளும்.

அமைச்சர் மூர்த்தி, ‘இந்த தேர்தலில் தோற்றால் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்’ என சொல்கிறார். அவருக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம்; நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை.

தங்கதமிழ்ச் செல்வன் வந்தால் எல்லோரும் ‘போப்பா... இரட்டை இலையில் ஓட்டு போட்டுவிடுகிறேன்’ என சொல்கின்றனர்.

TTV Dhinakaran

டிடிவி தினகரனை பார்த்தாலும், தங்கதமிழ்ச் செல்வனை பார்த்தாலும் இரட்டை இலை சின்னம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும். துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்” என்று பேசினார்.