தமிழ்நாடு

”1000 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும்”- அமைச்சர் தகவல்

”1000 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும்”- அமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

“1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலுள்ள நியாயவிலைக்கடைகள் தனியாக செயல்பட, குழு அமைக்கப்பட்டு விரைவில் புதிதாக நியாய விலைக்கடைகள் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்

திருவாரூர் மாவட்டம் கொராடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட இலவங்கார்குடி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடையினை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, அங்காடிகள் மூலம் உணவுபொருட்களை எளிதாக பெற்றுக்கொள்கின்ற வகையில் தாய் அங்காடிகளிலிருந்து பிரித்து பகுதிநேர அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கு உணவுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் 3,86,215 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தமாக 734 நியாயவிலைக்ககடைகள் (579 ழுமுநேர அங்காடிகளும், 155 பகுதிநேர அங்காடிகளும்) செயல்பட்டு வருகின்றன.

இன்றைய நிலவரப்படி இலவங்கார்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் 4 முழு நேர நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 1596 குடும்ப அட்டைதாரர்களை கொண்ட இலவங்கார்குடி முழுநேர நியாயவிலைக்கடையின்கீழ் 338 அரிசி குடும்ப அட்டைகள், 46 ஏ.ஏ.ஒய். அரிசி குடும்ப அட்டைகள், 2 காவலர் குடும்ப அட்டைகள், 14 ஓ.ஏ.பி. குடும்ப அட்டைகள் உள்ளன. இப்படி 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களை கொண்ட இலவங்கார்குடி கிராமத்தில், புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை பிரிக்கப்பட்டுள்ளது. அது இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இப்படி திறக்கப்படும் பகுதிநேர நியாயவிலைக்கடை செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் செயல்படும். தமிழகம் முழுவதும் 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலுள்ள நியாயவிலைக்கடைகள் எவையென கண்டறிய தனியாக செயல்பட குழு அமைக்கப்படவுள்ளது. அதன்மூலம் விரைவில் புதிதாக பல பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவையன்றி வாடகை கட்டடத்தில் இயங்கும் நியாயவிலைக்கடைகளுக்கும் விரைவில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படம். தமிழக முதல்வர் ஆணைகிணங்க சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் அது கட்டப்படும். இப்போதைக்கு திருவாரூர் மாவட்டத்தில் 480 நியாய விலைக்கடைகள் சொந்த கட்டிடத்தில் இயக்கி வருகிறது. இங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘புதிதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிபவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்த 4,52,000 நபர்களுக்கு தற்போதுவரை குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,42,000 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தினை பொறுத்தவரையில் 10,426 நபர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்ததன் அடிப்படையில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,309 நபர்களுக்கு குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

நியாயவிலைக்கடைகளில் எதிர்வரும் தைபொங்கல் திருநாளினை முன்னிட்டு 20 வகையான மளிகைப்பொருள்கள், அதனுடன் முழு கரும்பு ஒன்றும் என மொத்தம் 21 வகையான பொருட்கள் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு பின்பற்றப்படும். கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைகடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து உள்ளிட்ட அரசாணைகளை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அதுவும் பின்பற்றப்படும். போலவே குடிசையில்லா, வேலைவாய்ப்புடன் கூடிய டெல்டா மாவட்டங்கள் விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.