தமிழ்நாடு

நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டம் : ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

webteam

தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம் தேதி நியாய விலை கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் No work no pay என்ற ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழகம் முழுவதும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை பணியாளர் சங்கம் சார்பில் வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற கடையடைப்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு டிஎன்சிஎஸ்சி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் தனித்துறை பணிவரன்முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி   இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஓன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் வரும் 15-ஆம் தேதி முதல் நியாய விலை கடை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர், எனவே தங்கள் மண்டலத்தில் செயல்பட வேண்டிய அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறை இன்றி செயல்பட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு,  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய உரிய மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பணியாளர்களுக்கு No work no pay என்ற அடிப்படையில் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.