சென்னையில் தலைமைச் செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம் எல் ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் பழனிசாமி அளித்த பதிலை ஏற்க மறுத்து, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். முழக்கமிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் தனபால் , சமாதானம் செய்ய முயற்சித்தார். அவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ரத யாத்திரையைக் கண்டித்து முழக்கமிட்டபடி வெளியே வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான எம்எல்ஏக்கள், தலைமைச் செயலக வளாகத்தைக் கடந்து, ராஜாஜி சாலையில் மறியிலில் ஈடுபட்டனர். அங்கு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உட்பட 75 எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி ஒன்று கூடுதல்,போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளில் கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.