தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ரத யாத்திரைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தமிழ்நாட்டில் ரத யாத்திரைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

webteam

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவை மையமாகக் கொண்டு மகாராஷ்டிராவில் இயங்கும் ஸ்ரீ ராம தாஸ மிஷன் யூனிவர்சல் சொசைட்டி எனும் அமைப்பு சார்பில், அயோத்தியில் உள்ள கரசேவக்புரம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது.தமிழகத்திற்குள் இன்று நுழைந்த ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சென்றடைய உள்ளது.அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது, இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை நிறுவுவது, ராமாயணத்தை பாடத்திட்டமாகக் கொண்டு வருவது, உலக இந்து தினம் உருவாக்கி கடைப்பிடிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராமர் கோயில் கட்டும் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதற்கு ஆதரவு தேடி ரத யாத்திரை வருவது சட்டப்படி தவறு என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்கி இடம்பிடிக்க முயற்சிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுகையில்  “மற்ற மாநிலங்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி கவலையில்லை என்றும் அங்கெல்லாம் காலூன்றி இருப்பதால் தேர்தல் கண்ணோட்டத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை சொந்தக்கால் இல்லாதவர்கள் என்பதால் எதிர்க்கிறோம்” என வீரமணி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா “ராம ராஜ்ஜிய ரத யாத்திரை சட்டவிரோதமானது. இது ஆன்மீக யாத்திரை அல்ல, அரசி‌யல் யாத்திரை” என்று விமர்சித்தார்.