ராணிப்பேட்டையை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள சிறுவர்கள் உட்பட பல்வேறு சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும், காரை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையிலும் பயின்று வருகின்றனர். இப்படி இங்கு மொத்தம் 60க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கி பயின்றுவருகின்றனர். அவர்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கு தேர்வு முடிவடைந்துள்ளதால் குறிப்பிட்ட அந்த மாணவர்கள் தங்களது வீட்டிற்குச் திரும்பியுள்ளனர். மீதமுள்ள மாணவர்களில் சூர்யா என்ற காட்டு ராஜா (10), பூபதி (12), சூர்யா (13), தினேஷ் (10) ஆகிய நான்கு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது
இதையடுத்து சிறுவர்கள் தப்பியோடியதை அறிந்த அரசினர் குழந்தைகள் இல்ல பொறுப்பு கண்காணிப்பாளர் ராதே கண்ணன், இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி இரண்டு தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்கீழ் தப்பியோடிய சிறுவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.