தமிழ்நாடு

மீன்பிடித் தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டி மீனவர்கள் போராட்டம்

webteam

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மீனவ அமைப்பினர் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. 

ராமநாதரபுரத்தில் மாணவர்கள் மீன்பிடி சார்பு அமைப்பினர்கள் மற்றும் அனைத்து மீனவ சங்கங்கள் ஒருங்கிணைந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்கள் உட்பட 19 பேரை விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட 160க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் இலங்கையில் புதிய மீன்பிடி தடைச்சட்டத்தை திரும்பபெறவேண்டும் என்பதை வலியுறுத்தினர். 

போராட்டத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டு கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மீனவப்பெண்கள், இலங்கை சிறையிலுள்ள மீன்பிடி தொழிலாளர்களின் குடும்பத்தார்கள் மற்றும் மீனவ சங்க பொறுப்பாளர்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், தமிழக மீனவர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அவர்கள் கூறினர்.