தமிழ்நாடு

‘என்னை மீட்டுச் செல்லுங்கள்’ - காத்தாரில் சிக்கிய தமிழக இளைஞர் கண்ணீர் 

‘என்னை மீட்டுச் செல்லுங்கள்’ - காத்தாரில் சிக்கிய தமிழக இளைஞர் கண்ணீர் 

webteam

கத்தார் நாட்டு சிறையில் தவிக்கும் தன்னை மீட்டு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கும்படி ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

கத்தார் நாட்டில் ஓட்டுநர் வேலைக்குச் சென்றவர் செல்வராஜ். இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உசிலங்காட்டு வலசை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கத்தார் நாட்டில் ஓட்டுநர் வேலைக்காக சென்றுள்ளார். வேலையின்போது கத்தார் நாட்டு முதலாளி இவரை அடித்து துன்புறுத்தியதற்காக எதிர்த்துப் பேசியுள்ளார்.

ஆகவே பொய் புகார்கூறி செல்வராஜ் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் கத்தார் முதலாளியிடம் இருப்பதால் தாயகம் திரும்ப முடியாமல் அவர் தவித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், தன்னை எப்படியாவது இந்திய தூதரகம் தலையிட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து, அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக செல்வராஜ் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இளைஞரை மீட்டு தாயகம் அழைத்துவர இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் செல்வராஜை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.