தமிழ்நாடு

ராஜீவ் கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

webteam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன் தம்மை ஒரு மாத கால பரோலில் அனுப்ப உத்தரவிடக் கோரிய வழக்கை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 26 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். 26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். தற்போது எனது அம்மாவுக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய் வாய்படுகிறார். சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார். கடந்த 2012ல் பரோலில் வந்த நிலையில் 2014க்கு பிறகு பரோலில் வர தகுதி உண்டு. எனவே எனது  குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் விமலா - கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், சிறைத்துறை காவல் துணைத்தலைவர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்," ரவிச்சந்திரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதோடு, அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் வழங்குவதில் சிரமம் உள்ளது என பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதையடுத்து வழக்கை பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.