பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி, “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட அவர்களை மன்னித்துவிட்டார்கள். சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
அத்துடன், “ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது 18 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும். என் தாய் உட்பட பலர் படுகாயமடைந்தனர். அந்தச் சம்பத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய உதவிகளை அரசு செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.