தமிழ்நாடு

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு... விடாமுயற்சியுடன் நோயாளியை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை!

அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு... விடாமுயற்சியுடன் நோயாளியை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை!

webteam
அடுத்தடுத்து 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட இளைஞரை காப்பாற்றியுள்ளது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை. 
விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் சென்னை மடுவங்கரையில் உள்ள சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் பொருளியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் கடந்த 28 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற அவருக்கு திடீரென வியர்த்துக்கொட்டி, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு நிலை குலைந்திருக்கிறார். இதைக்கண்டு நொடியும் தாமதிக்காமல் அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சக ஆசிரியர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை அங்கு உறுதி செய்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சரியாக 9 மணிக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையை ராஜேஷ் அடைந்த போது, அவருக்கு இதயத்துடிப்பு முற்றிலும் நின்று போய் இருந்திருக்கிறது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் நெஞ்சுவலி சிகிச்சை மைய மருத்துவர்களும் இணைந்து Resuscitation எனப்படும் நோயாளி மீண்டும் உயிர்பெறத் தேவையான சிகிச்சையை 9 மணி முதல் 9.55 வரை கொடுத்ததுள்ளனர். வழக்கு மொழியில் "ஷாக்" என சொல்லப்படும் defibrillation சிறிது நேர இடைவெளிகளிலேயே 5 முறை திரும்ப திரும்ப நோயாளிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இடையிடையே CPR சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சரியாக 10.36 மணிக்கு cardiac catheterization lab ல் அனுமதிக்கப்பட்ட ராஜேஷூக்கு ரத்தக் குழாயில் மோசமாக இருந்த அடைப்பு அகற்றப்பட்டு 10.46 மணிக்கு ஸ்டென்டிங் கருவி பொருத்தப்பட்டது. ஆனால் எதிர்பாரா வகையில், இதற்கு பின்னரும் 11.15 க்கு மீண்டும் ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் மருத்துவக்குழு விடாமுயற்சியுடன் அதே சிகிச்சைகளை மேற்கொண்டு அதிலும் வெற்றியும் அடைந்தனர். மொத்தமாக அவருக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்திலிருந்தும் மருத்துவர்கள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிகிச்சையளித்த மருத்துவர்களுள் ஒருவரான இதயவியல் நிபுணர் பிரதாப் இதுபற்றி (அடுத்தடுத்த மாரடைப்பு மற்றும் இள வயது மாரடைப்பு) நம்மிடையே பேசுகையில், “36 வயதிலேயே மாரடைப்புகள் ஏற்படுவது அதிகரித்துவிட்டதால், இளையோரும் ஒவ்வொரு வருடமும் இதய பரிசோதனைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் பேசுகையில், “American journal of cardiology அளிக்கும் புள்ளி விவரங்களின்படி, இதுவரை 3 முறை மாரடைப்பு ஏற்பட்டோர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர். அப்படியிருக்கையில், நம் குழுவினர் செய்த இந்த சாதனை பற்றி புதிய ஆய்வுக் கட்டுரையே வெளியிடலாம். அதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். விடாமுயற்சியுடன் நோயாளியின் உயிர்காக்க தொடர்ந்து போராடும் இதயவியல் மருத்துவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு" என்றார். 

இந்நிலையில், 6 முறை மாரடைப்பு ஏற்பட்டு மூன்றே நாட்களில் (மார்ச் 3) செயற்கை சுவாசம் தேவைப்படாத நிலைக்கு வந்துள்ளார் ஆசிரியர் ராஜேஷ். மார்ச் 5 ஆம் தேதி முதல் எழுந்து நடமாடுகிறார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் இவர் ஓரிரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். 

Golden time என்று சொல்லப்படும் மாரடைப்பு ஏற்பட்டு 30 நிமிடத்துக்குள் இதயவியல் நிபுணர்களை அணுகிவிட்டாலே, மாரடைப்பிலிருந்து ஒருவர் மீண்டுவிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்த ஆசிரியர்களுக்கும், உயிர் காத்த மருத்துவர்களுக்கும் ராஜேஷின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தார்.