தமிழ்நாடு

`குடும்பத்தோடு இணைந்து வாழ, எனக்கு பொது மன்னிப்பு வழங்குக’- ஆளுநருக்கு சாந்தன் கடிதம்

நிவேதா ஜெகராஜா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான சாந்தன், தான் கடந்த 30 ஆண்டுகளாக ஆசாபாசங்களை இழந்துள்ளதாகவும், தனக்கு பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுவிக்கவேண்டும் எனக் கோரியும் சிறைத்துறை மூலம் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் சாந்தன். இவர் இன்று வேலூர் மத்திய சிறை துறை மூலம் தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், `நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். குடும்பத்தை பிரிந்தும், ஆசாபாசங்களை மறந்தும் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் எனக்கு பொது மன்னிப்பு வழங்கி என்னை விடுக்க வேண்டும்’ என உருக்கமாக அக்கடிதத்தில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு சாந்தன் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின், தற்போது பேரறிவாளன் விடுதலைக்குப் பின்னரே அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து, கடந்த மே 18-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.