கடந்த மாதத்தில் முருகன் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறைவிதிகளை மீறியதால் முருகனுக்கு வழங்கப்பட்டு வந்த சிறை சலுகைகள் ரத்துசெய்யப்பட்டு தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சிறைத்துறை வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாகக் கூறி முருகன் கடந்த மாதத்தில் 17 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
மீண்டும் தனிமைச் சிறையிலிருந்து தன்னை மாற்றக்கோரி சிறைதுறைக்கு மனு அளித்துவிட்டு உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது உண்ணாவிரதம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலுள்ள முருகனை சந்திக்க அனுமதிக்க கோரிய அவரது உறவினர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முருகனை அவரது உறவினர்களான நளினி மற்றும் அவரது மகள் சந்திக்க நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் முருகனின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவரது உறவினர்களைப் பார்க்க அவரை அனுமதியுங்கள் என்றும் நீதிபதிகள் டீக்காராமன், சுந்தரேஷ் கூறினர். இருப்பினும், சிறையிலுள்ள முருகனை வேறு அறைக்கு மாற்ற உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். முருகனை உண்ணாவிரதத்தை கைவிட கோரி வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.