தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதை அடுத்து அவரது உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று நாள் முழுக்க அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் விஜய், சத்யராஜ், நாசர், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் தியாகு உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்,
இந்நிலையில், இன்று காலை விஜயகாந்த்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குவிந்துள்ள தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதியுள்ள மனிதர். எப்படியும் உடல்நலம் தேறி வந்துருவானுன்னு சொல்லிட்டு எல்லாரும் நெனச்சோம்.
ஆனா, சமீபத்துல நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்துல அவர பார்த்தபோதே, எனக்கு கொஞ்சம் நம்பிக்கை கம்மியாயிருச்சு. அவரு நல்ல ஆரோக்கியமா இருந்திருந்தா, தமிழக அரசியல்ல ஒரு மிகப்பெரிய சக்தியா திகழ்ந்திருப்பாரு. தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது பண்ணியிருப்பாரு. அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் இழந்திருக்காங்க. விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்றார்.