தமிழ்நாடு

அவசரச் சட்டம் ஏன்?: ஆளுநர் விளக்கம்

அவசரச் சட்டம் ஏன்?: ஆளுநர் விளக்கம்

webteam

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ஆளுநர் வித்தியாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் ஆறாவது நாளாக நடந்துவருகிறது. இந்தநிலையில், மிருகவதை தடுப்பு சட்டத்தில் காளைகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்களின் கலாசார உரிமையைக் காக்கும் பொருட்டும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு தடுக்கும் பொருட்டும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 1960ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்தில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு மாநில அரசு சார்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக நீங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை வரும் 23ம் தேதி கூட உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சட்டத்தைப் பிறப்பிப்பதற்கான நடைமுறைகளுக்கு ஏற்படும் காலதாமதத்தையும், தமிழகத்தின் இன்றைய சூழலலையும் கருத்தில் கொண்டு இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான தீர்வு எட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இயல்புநிலை திரும்பும் என்றும் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.