ராஜசேகர் பச்சை pt web
தமிழ்நாடு

“ஏறுவதைவிட இறங்குவதுதான் சிரமமாக இருந்தது” – எவரெஸ்ட் சிகரம் தொட்ட ராஜசேகர் பச்சை பேட்டி!

“தொலைபேசியில் ரீல்ஸ் கேம் விளையாடுவதை தவிர்த்து விட்டு ரியல் கேம் விளையாடுங்கள்” என்று எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழரான ராஜசேகர் பச்சை அறிவுறுத்தியுள்ளார்.

webteam

சென்னை அடையாறில் உள்ள மெட்ராஸ் போட் கிளப்பில் தமிழ்நாட்டில் இருந்து பொதுமக்களின் ஒருவராக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழரான குட்டி (எ) ராஜசேகர் பச்சை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய மலையை ஏறியுள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு முன்பாக சென்னையின் திரிசூலம் மலையில் தான் பயிற்சியை மேற்கொண்டேன்.

எவரெஸ்ட் சிகரம்

அதற்குப் பிறகு வெள்ளையங்கிரி மலையிலும் பின் மணாலி போன்ற மலைகளிலும் ஏறி பயிற்சி செய்தேன். மணாலியில் மைனஸ் 20 டிகிரி வரை இருக்கும். இரண்டு மாதம் அங்கே பயிற்சி செய்தேன். ஆனால், எவரெஸ்டில் சாதாரண ஷூ போட்டுக் கொண்டு நடக்க முடியாது. அதனால் அங்கே நடந்தபோது கடினமாக இருந்தது. முதலில் 5,000 மீட்டர், அதற்குப் பிறகு 6,000 மீட்டர் சென்றேன். மென்டலி சிறிது சிறிதாக பயிற்சி எடுத்தேன். மலை உச்சியில் நான் இருக்கும் போதே முதல்வர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்; அதை அறிந்து மகிழ்ந்தேன். அது என்னை மேலும் ஊக்குவித்தது. அரசு எனக்கு சப்போர்ட் செய்தால் இன்னும் நிறைய முயற்சிகளை செய்வேன்.

கடல் சார்ந்த போட்டிகளில் மீனவ இளைஞர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள் என சிலர் விமர்சிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் முறையாக நடுவர்கள் கூறுவதே வெற்றி. இருப்பினும் வேறு ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைத்தேன். அதனால்தான் எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என நினைத்தேன். எனது வீட்டில் உள்ளவர்கள் நிறைய உதவிகள் செய்தார்கள். சபரீசன் சகோதரரிடம் ஒருமுறை சொன்னேன். அவரின் வழிகாட்டுதலின் படி, Peninsular Research Operation என்ற முறை மூலம் இதனை நான் சாதித்தேன்.

ராஜசேகர் பச்சை

எவரெஸ்டில் சாப்பாடு மற்றும் வெந்நீர் தான் அதிகம் உட்கொண்டேன். உண்மையில் எவரெஸ்டின் அந்த உயரத்தை யாராக இருந்தாலும் எட்டுவது கடினம். நான் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவுள்ளேன் என்பது வீட்டில் உள்வர்களுக்குத் தெரியாது. பின்னர் நான் மலையேறி முடித்துள்ளேன் என வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பேசினேன்.

இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும், தொலைபேசியில் ரீல்ஸ் கேம் விளையாடுவதை தவிர்த்து விட்டு ரியல் கேம் விளையாடுங்கள். அடுத்ததாக உலகெங்கிலும் உள்ள பெரிய சிகரங்களை ஏற உள்ளேன்.

நான் மலையேறும் போது மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனக்கு பெரிதும் உதவி செய்தார்கள் நிறைய டிப்ஸ்களை கொடுத்தார்கள். முதல்வர் இந்தியா வந்தவுடன் அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். மலையேறும் போது எனது அம்மா செய்த மீன் குழம்பை மிஸ் செய்தேன். மலையில் கொடுக்கப்படும் உணவு நன்றாக இருக்கும். ஆனால், ஐந்து நிமிடத்தில் உணவு குளிர்ந்து விடும். மலையேறுவதற்கு முன்பு 73 கிலோ இருந்த நான் மலையேறிவிட்டு இறங்கிய பிறகு 62 கிலோவாக குறைந்து விட்டேன். இதற்குப் பிறகு என் தாய் கொடுக்கும் உணவை சாப்பிட்டு தான் உடல் எடையை ஏற்ற வேண்டும்.

இரவில் மலையேறுவதுான் எளிதாக இருந்தது. மலையேறிவிட்டு கீழே வரும்போது மிகவும் கடினமாக இருந்தது. எனது கால் நிலை கொள்ளவில்லை. குடிகாரர்கள் குடித்துவிட்டு ஆடுவது போல் ஆடியது. மலைமேல் செல்லச் செல்ல ஆக்சிஜன் குறைந்ததால் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதுபோன்ற தடைகள் அனைத்தையும் மீறி சாதித்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என தான் மலையேறிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.