பேரரசர் ராஜராஜ சோழன் பிறந்த தினமும் அரியணை ஏறிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம் சதய விழாவாக ஆண்டுதோறும் தஞ்சை மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1,039ஆவது ஆண்டு சதய விழாவின் முதல் நாளான நேற்று கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் என தஞ்சையில் விழா களை கட்டியது. 2ஆவது நாளாக இன்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்வருடம் முதல் நிகழ்வாக கம்பீரமாக நிற்கும் மாமன்னன் ராஜராஜனின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஆட்சியர், எம்.பி., எம். எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என பல தரப்பினரும் சோழ மாமன்னனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நூறுக்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறை பாடி சிறப்பித்தனர். செண்டை மேளம் கொம்பு போன்றவையும் முழங்கின.
இதைத் தொடர்ந்து தமிழ்த் திருமுறைகள், யானை மீது வைத்து 4 ராஜ வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி, பால், மஞ்சள், சந்தனத்தை கொண்டு 48 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜனின் நினைவிடம் உள்ளதாக கருதப்படுகிறது. அங்குள்ள சிவலிங்கத் திருமேனிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த ஆண்டு பக்தர்களால் வழங்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கிரீடத்தை, செண்டை மேளம் முழங்க சிவலிங்கத்திற்கு பொருத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன், லோகமாதேவி ஐம்பொன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. சதய விழாவின் இறுதி நிகழ்வாக தஞ்சை பெரிய கோயிலில் 1,039 நடன கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றன.