தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தி திணிப்பு எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இருப்பினும் இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நிகழ்ச்சியில் பாடபட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம், அதில் ஒரு வரி நீக்கப்பட்டு பாடப்பட்டது.
முன்னதாக, டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, “மொழி எப்போதும் திணிக்கப்படவில்லை, அதனை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு என கூறி இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயல்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தி மொழியை படிக்க மக்கள் விரும்புகின்றனர். அதனை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று நான் அறிந்தேன். பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” என்று உரையாற்றினார்.
இது ஒரு புறம் இருக்க, அந்த விழாவில் பாடபட்ட தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ''தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்'' என்ற வரி விடுபட்டிருந்தது. இது சர்ச்சைக்குள்ளான நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்களது கண்டனத்தை முன்வைத்துள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்ற வாக்கியத்தை விடுத்து பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. தவறு செய்தவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திராவிடம் என்பதை தொடர்ந்து எதிர்த்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் "திராவிடநல் திருநாடு" என்ற வார்த்தை விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.