தமிழ்நாடு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: கிராம மக்கள் அவதி

webteam

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் புளியம்பட்டி கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இக்கிராமத்திற்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான புதிய தார் சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. புதிய தார் சாலை சுமார் ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தி போடப்பட்டதால், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கும் கிராமமாக புளியம்பட்டி கிராமம் மாறியுள்ளது. மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பெரும்பாலான கிராம சாலைகள் மழை நீரால் தெரியாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் கிராம மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறனர். மழை நீர் கிராமங்களில் இருந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.