தமிழ்நாடு

தமிழகம் - புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் - புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

webteam

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது. அது மேலும் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது. தற்போது ராமநாதபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து நீடிக்கும் நிலையில், கனமழையால் பல்வேறு அருவிகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஏரிகள், நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வழிந்தோடுகிறது. கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 தஞ்சையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 32 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரத்து 714 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.