அசானி புயல் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வங்கக்கடல் பகுதியில் உருவான அசானி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வட தண்டலம், புளியரம்பாக்கம், தூளி, பைங்கினர், அனக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடை விடாது பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான பின்னவாசல், குன்னியூர், திருநெய்பேர், மாங்குடி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகியமண்டபம், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.