அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
இதற்கிடையே கனமழையால் சென்னை சாலைகள் குளம்போல் காட்சி அளிக்கின்றன. சாலையில் தேங்கியுள்ள நீரால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.