சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளிலுள்ள சாலைகள், வீடுகளில் மழைநீர் தேங்கத்தொடங்கியது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மழைநீர் தேங்கியதன் காரணமாக, 5 சுரங்கப்பாதைகள் (காலை 7 மணி நிலவரப்படி - கணேசபுரம், சுந்தரம் பாயின்ட், CB சாலை சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மற்றும் MRTS சுரங்கப்பாதை) மூடப்பட்டுள்ளன. இவையன்றி வெள்ளத்திற்கு இடையே ஆங்காங்கே சிக்கிய மக்கள் படகுகளின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தவகையில், சென்னையில் மழை பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு இதுவரை 3,17,935 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நேற்று காலை உணவு 1000 பேருக்கும், மதிய உணவு 45,250 பேருக்கும், இரவு உணவு 2,71,685 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் மழைநீர் மொத்தமாக அகற்றப்பட்டுள்ளது. 103 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.