பிரதீப் ஜான் முகநூல்
தமிழ்நாடு

சென்னையில் இன்றும் இந்நேரத்தில் மழை தொடரும்... பிரதீப் ஜான் போட்ட ட்வீட்!

“சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சில இடங்களில் கனமழை பெய்யும். பகல் வேளையில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன” - பிரதீப் ஜான்

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றுமுதல் இன்றுவரை தென் தமிழகம், டெல்டா, உள் மாவட்டங்கள் என மாநிலம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், அதில் மாற்றம் ஏற்பட்டு, கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மதியம் காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடலில் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்பின்னர் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்க தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16 ஆம் தேதி வரை லேசான மழைக்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், பருவமழை தொடர்பான முக்கியமான ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதில், "புதுச்சேரி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று மழைப்பதிவு சென்சூரி அடித்துள்ளது. அந்த பகுதி முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது. நாமக்கல், அரியலூர், பெரம்பலூரிலும் நல்ல மழை பெய்துள்ளது.

இன்று முதல் உள்மாவட்டங்களும் மழை பெறும். கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும். நெல்லை, தூத்துக்குடியிலும் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை சில இடங்களில் கனமழை பெய்யும். பகல் வேளையில் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.