தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை pt web
தமிழ்நாடு

மாரி வந்தது வெப்பம் தணிந்தது... தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

PT WEB

சேலம் மாநகரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அம்மாபேட்டை, பொன்னம்மாப்பைட்டை, நான்கு ரோடு, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் வரை மழை நீடித்த காரணத்தால் தாழ்வான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பூலாம்பட்டி, கொங்கணாபுரம், கள்ளுக்கடை, சித்தூர் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.

வேலூர் மாநகர் சத்துவாச்சாரி, வள்ளலார், அலமேலுமங்காப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கனமழை பெய்தது. மாலை வேளையில் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் வேலூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காற்றுடன் பெய்த கன மழை ஒரு கட்டத்தில் தீவிரமாக மாறி மிக கனமழையாக கொட்டியது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆராசூர், இளங்காடு, தெய்யார், நல்லூர், படூர், எரமலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கனமழையினால் வெப்ப காற்று மாறி, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.