ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெறும் அதே நேரத்தில், வட இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வியாழக்கிழமை தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 2 ஆம்தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறுது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 5 ஆம்தேதி வரை மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 3 ஆம்தேதி வரை இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.