தமிழ்நாடு

குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்ட உணவு.. முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி!

குப்பை வண்டியில் கொண்டுவரப்பட்ட உணவு.. முகாமில் தங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி!

webteam

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் நகராட்சி குப்பை சேகரிக்கும் வண்டியில் கொண்டுவரப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து காவிரியில் 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வரை நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையததைச் சுற்றியுள்ள காவேரி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு நகராட்சி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதன் சந்தை பகுதியில் தனியார் திருமண மண்டப முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர் செல்வராஜ் தனது சொந்த செலவில் உணவு வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவர்களுக்கு கொண்டுவரப்பட்ட உணவு நகராட்சியின் பொது வாகனத்தில் கொண்டு வரமால் உணவை அவமதிக்கும் வகையிலும் பொதுமக்களை அலட்சியமாக பார்க்கும் வகையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சேகரிக்கச் செல்லும் வாகனத்தில் கொண்டுவரப்பட்டதால் முகாமில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இதனால் நகராட்சி ஆணையாளர் அலட்சியமாக செயல்பட்ட நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.