பள்ளிகளுக்கு விடுமுறை file image
தமிழ்நாடு

இடி முழுக்கத்தோடு அதிகாலையில் சென்னையை மிரட்டிய கனமழை... மழை எச்சரிக்கை எங்கெல்லாம் தொடர்கிறது?

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று (25.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னையில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், போரூர், கோட்டூர்புரம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவெற்றியூர் போன்ற இடங்களில் கனமழையும் பெய்தது.

கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் முழங்கால் வரையில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கனமழை காரணமாக சென்னை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (25.11.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதால் அங்கும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த ‘சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும்’ என்ற அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டு தற்போது திருவாரூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அந்த 12 மாவட்டங்கள் - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை, இராமநாதபுரம் ஆகியவை.