பாதுகாப்பு பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ரயில் நிலையம் மூடப்பட்டது.
சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி சுமார் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறையில் தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் உடன் இருந்த 39 காவலர்களையும் அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த பரிசோதனையின் முடிவில் மேலும் 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எனப்படும் மேம்பால ரயில் நிலையம் மூடப்பட்டது. அந்த ரயில் நிலையம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறி இருக்கிறது. சென்னையில் ஒரு ரயில் நிலையம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாறி இருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.