கொரோனா பொதுமுடக்க காலத்தில் முன்பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளுக்கான தொகை இன்று முதல் திரும்ப வழங்கப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கத்தில் ரத்தான ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை இன்று முதல் சென்னை ரயில்வே கோட்டத்தின் முக்கிய நிலையங்களில் திரும்ப பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் வரை ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்திற்கான ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணத்தையும் திரும்ப வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணம் ரத்தான நாளில் இருந்து 180 நாட்களுக்குள் கட்டணத்தை திரும்பப்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திண்டிவனம், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும், ஜோலார்பேட்டை நிலையங்களில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், கட்டணத்தை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கவுன்ட்டர்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மார்ச் 22 முதல் 31ம் தேதி வரையிலான பயண ரத்துக்கான கட்டணத்தை இன்று முதல் கவுன்டர்களில் பெறலாம். ஏப்ரல் 1 - 14 வரையிலான பயண ரத்து கட்டணத்தை ஜூன் 12ம் தேதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஏப்ரல் 15 - 30 வரையிலான பயண ரத்து கட்டணத்தை, 19ஆம் தேதியில் இருந்தும் திரும்பப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 - 15 வரையிலான பயண ரத்துக்கு, 26ம் தேதியில் இருந்தும், மே 16 - 31 வரையிலான பயண ரத்துக்கு ஜூலை 3 இருந்தும் கட்டணத்தை திரும்ப பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஜூன் 1 - 30ம் தேதி வரையிலான பயண ரத்து கட்டணத்தை, ஜூலை, 10ல் இருந்து கட்டணம் திரும்பத் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.