3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி கோவையில் தனது பரப்புரை தொடங்கினார்.
கோவை களப்பட்டி பகுதியில் கே.எஸ் அழகிரியுடன் இணைந்து பரப்புரையை தொடங்கி பேசிய அவர், ‘’தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. இந்த முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது. தமிழக கலாசாரத்தை மோடி ஏற்கவில்லை. தமிழக மக்களை 2ஆம் நிலை குடிமக்களாகத்தான் அவர் கருதுகிறார்.
நமது நாட்டில் பல்வேறு மொழிகள், இனங்கள், வாழ்க்கைமுறைகள் மற்றும் கலாசாரங்கள் இருக்கின்றன. அனைத்து மொழிகளுக்கும் இங்கு சமமான உரிமை இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். நமக்கும், மோடிக்கும் இருக்கிற வேறுபாடே இதுதான்.
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களாக உள்ள தன்னுடைய இரண்டு மூன்று நண்பர்களுக்காகத்தான் மோடி செயல்படுகிறார். அனைத்து மீடியாக்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களையும் மோடி அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். பணம் அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது. இந்தியா மற்றும் தமிழக மக்களுக்கு சொந்தமான ஒவ்வொன்றாக மோடி விற்றுக்கொண்டுவருகிறார். விவசாயிகளுக்கு சொந்தமானதை புதிய 3 சட்டங்கள் எடுத்துக்கொண்டது. பெரிய நிறுவனங்களுக்கு விவசாயிகள் தொழிலாளர்களாக மாறவுள்ளனர். எனவேதான் அதற்கு எதிராக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
அனைத்து விஷயங்களிலும் தமிழகம்தான் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். இந்தியாவிற்கு தொழில்சாலைகளும், உற்பத்தி நிறுவனங்களும் தேவை’’ என்று தொடர்ந்து பேசிவருகிறார்.