செய்தியாளர்: ஐஷ்வர்யா
கோவையில் நேற்று நடைபெற்ற I.N.D.I.A கூட்டணி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்...
“தமிழ்நாட்டிற்கு வருவதை நான் எப்போதும் விரும்புவேன். ஏனெனில் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறேன். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாசாரம், வரலாறு எனக்கு பிடிக்கும். இதனால் இங்கு வந்து உங்களுடன் பேசுவதை விரும்புகிறேன். இன்று நாடு முழுவதும் பல தத்துவப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நரேந்திர மோடியின் அரசு வெளியில் செல்லும் நேரம். உண்மையில் இது மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு என்றுதான் கூற வேண்டும். மோடி எல்லாவற்றையும் அதானிக்காகதான் செய்கிறார்.
பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் அறிவாற்றல் மிகுந்தவர்கள். அவர்கள் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகமே கேட்டது. நீங்கள் மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்க வேண்டும். ‘ஏன் எங்களின் மொழி, வரலாறு, பாரம்பரியத்தை அவதூறாக பேசுகிறீர்கள்?’ என கேட்க வேண்டும். மோடி தமிழ்நாடு வந்தால் தோசை பிடிக்கும் என கூறுவார். டெல்லி சென்றால் ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவார்.
நீங்கள் இங்கு வந்து தோசை பிடிக்கும் எனக் கூறி தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள் மோடி! உங்களுக்கு தோசை இல்லை, வடை கூட பிடிக்கலாம். அது எங்களின் பிரச்னை இல்லை. தமிழ் மொழி பிடிக்குமா? என்பதுதான் பிரச்னை.
‘பிரதர்’ ஸ்டாலின்.... அரசியலில் நான் யாரையும் இப்படி பிரதர் என கூறியதில்லை. ஆனால், ஸ்டாலினை அழைக்கிறேன்.
உச்சநீதிமன்றமே தேர்தல் பத்திரம், சட்ட விரோதம் என கூறியது. தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்தவரின் பெயர், தேதி, நேரம் மற்றும் எவ்வளவு பணம் என அனைத்தும் வெளியானது. இதன் மூலம் மோடியின் அறிவாளித்தனமான ஊழல் தெரியவந்தது. எந்த நிறுவனத்தின் மீது CBI, ED, IT ரெய்டுகள் நடந்ததோ, அந்த ரெய்டுகளுக்குப் பிறகு அந்த நிறவனங்கள் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் அளித்ததும் தெரியவந்தது.
பின்னர் பணம் அளித்த நிறுவனத்தின் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. இது ஒரு சமூக அவலம். பணத்தை மிரட்டி வாங்குவதுதான் அச்சுறுத்தல் என்கிறோம். இந்த அரசில் சுரங்கம், சாலைகள் போன்றவைக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்கியுள்ளனர். இந்த ஊழல் பாஜகவின் சிறு பகுதிதான். ஆனால், மோடி தன்னை நல்லவர் என கூறி வருகிறார்.
22 இந்திய பணக்காரர்கள் 70 கோடி மக்களின் செல்வத்தை வைத்துள்ளனர். 30 விவசாயிகள் தினமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் பிரச்சையை தீர்ப்போம். நாட்டில் 30 லட்சம் காலிப்பணியிடம் உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
நீட் தேர்வினால் தமிழக இளைஞர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை எப்படி கற்கிறார்கள் என தெரியும். இதனால், நீட் தேர்வு வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நாங்கள் தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம். மோடி 16 லட்சம் கோடியை வங்கிகள் மூலம் பெரும் முதலாளிகளுக்கு வழங்கியுள்ளார். ஆனால், நாங்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம்.
மோடி, அதானி கூட்டணி இந்தியாவில் இரண்டு பிரிவுகளை உருவாக்கி உள்ளது. ஒன்று கோடீஸ்வரர்கள், மற்றொன்று ஏழைகள். இதனால், நாங்கள் வறுமையை ஒழிக்க முயற்சிகளை எடுக்க உள்ளோம்.
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும். இந்த தொகை வறுமை நீங்கும் வரை அளிக்கப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூகநீதி நிலைநாட்டப்படும். இந்தியா மக்களுக்கான நாடு. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொந்தமானது இல்லை. கல்வி நிறுவனம், தேர்தல் ஆணையத்தில் ஆர்எஸ்எஸ் தாக்கம் உள்ளது. இது நாட்டின் கோட்பாட்டை தாக்குகிறது.
பாஜக அரசியல் சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை வைத்து தாக்குதல் செய்கின்றனர். இந்த நாடு பிரதமரின் சொத்து இல்லை. இந்த நாடு இங்குள்ள மக்களுக்குச் சொந்தமானது.
வரும் தேர்தல் I.N.D.I.A. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதற்கு நீங்கள் திமுக, காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார்.